கர்நாடக சட்டமன்றத்தில் நாளை குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சி கடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 18ந் தேதி சட்டசபைக் கூடியது. வாக்கெடுப்பை நடத்துமாறு ஆளுநர் வஜுபாய் வாலா 2 கடிதங்களை அனுப்பினார். மூன்று முறை அவர் கெடு விதித்தும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. விவாதத்தில் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்க இருப்பதால் அனைவரின் கருத்தையும் பதிவு செய்த பின்னரே வாக்கெடுப்பு நடைபெறுமென சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களாக காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தலைவர்கள் பலமுறை சந்தித்து, ஆட்சியை தக்கவைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தி அழைத்து வர காங்கிரஸ் கடைசி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதே போல் பாஜகவினரும் எடியூரப்பா தலைமையில் கூடி நாளை சட்டசபையில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, குமாரசாமி அரசுக்கு 98 எம்.எல்.ஏக்கள் ஆதரவும், தங்கள்106 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற விவகாரத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மற்றும் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமையா, திங்கட்கிழமை பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்தார். மும்பை எம்,எல்.ஏக்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனதாகவும் அவர்களை மீட்டு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சித்தராமையா தெரிவித்தார்.
