கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி வருகின்றன. மைசூர் மாவட்டம் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையானது முழு கொள்ளளவான 84 அடியை நெருங்கி வருகிறது. அணைக்கு வரும் ஒரு லட்சம் கன அடி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதேபோன்று தாரகா, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பரிசல் ஓட்டவும், ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என்பதால், அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
