கர்நாடக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் குமாரசாமி தனது கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கை கோரவிருக்கிறார். அங்கு ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்பது பிற்பகலுக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜிநாமா செய்ததால், கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசுமீது இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா? கவிழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 16 எம்எல்ஏக்களின் பதவி விலகல் கடிதங்கள் ஏற்கப்பட்டால், கூட்டணி அரசின் பலம் 101-ஆக குறைந்துவிடும். ஆனால், 2 சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107- ஆக உயர்ந்துள்ளது. இது உறுதியானால், கூட்டணி அரசு நிலைப்பதைக் காட்டிலும், கவிழ்வதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது.
