கர்நாடக சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் குமாரசாமிக்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கெடு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அளித்துள்ள நிலையில், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துள்ளதாக கூறிய எடியூரப்பா, அவர்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறினார்.
சட்டமன்ற விவகாரக் குழுவிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை குமாரசாமி அரசு சந்திக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று இன்று வலியுறுத்தப் போவதாகவும் எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதனால் குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆயினும் நாளை உச்சநீதிமன்றம் எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பைத் தள்ளிப்போட குமாரசாமி அரசு முயற்சித்து வருகிறது.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் முதலமைச்சர் குமாரசாமியையும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவையும் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில் அவரும் திடீரென மும்பையில் மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்குத் திரும்பி சென்று விட்டார். இதனால் குமாரசாமி அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது.
இதனிடையே பெங்களூர் புறநகர்ப் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் தங்கள் ஞாயிறு விடுமுறையைக் கொண்டாட கிரிக்கெட் விளையாடினர்.
