திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் நிறுவனங்களின் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு விற்கப்படும் பஞ்சாமிர்தங்களுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்கப்படாமல் விற்பனை செய்து கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதைஅடுத்து கடந்த மூன்று நாட்களாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான கடைகள், வீடுகள், திருமண மண்டபங்கள், தங்கும்விடுதிகள், பண்ணைவீடுகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் கணக்கில் வராத 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும் 3கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முதற்கட்ட விசாரணையில் குறைந்தபட்சமாக 90 கோடிரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முக்கிய ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அடுத்தகட்டமாக இரண்டு நிறுவன உரிமையாளர்களிடமும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு தேவையான வாழைப்பழம் கல்கண்டு போன்றவற்றை கொள்முதல் செய்த நிறுவனங்களிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
