எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வந்தால் சடலங்களைத்தான் அள்ளிச் செல்ல நேரிடும் என்பதை பாகிஸ்தானும் தீவிரவாதிகளும் மறந்துவிடக் கூடாது என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.
20ஆவது ஆண்டு கார்கில் வெற்றி தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவதற்கு இந்திய ராணுவம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில், கார்கில் ஊடுருவல் போன்ற விபரீத முயற்சியில் மீண்டும் இறங்க பாகிஸ்தானுக்கு துணிவிருக்காது எனக் கூறியுள்ள பிபின் ராவத், அப்படிப்பட்ட முயற்சிகளில் பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என குறிப்பிட்டார். எதிரிகள் எவ்வளவு உயரமான சிகரத்தை பிடித்தாலும் மீட்டெடுப்போம் எனவும் அவர் கூறினார்.
புல்வாமா தாக்குதல் காஷ்மீரின் உள்ளூர் விவகாரம் என இம்ரான்கான் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பிபின் ராவத், எல்லை கடந்த பயங்கரவாதம் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றும், இதற்கு அனைத்து ஆதாரங்களும் இருக்கும்போது யாருடைய கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
எல்லையில் வீரர்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தியிருப்பதாலும், கூடுதல் படைவீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாலும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்திருப்பதாகவும் பிபின் ராவத் கூறியுள்ளார்.
