தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெப்பசலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுகோட்டை மாவட்டம் பெருந்துறையில் 8 செண்டி மீட்டர் மழையும், தஞ்சாவூர் கிராண்ட் அணைக்கட்டில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சுழற்காற்று காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எச்சரித்துள்ளார்.
