சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் சிறந்த சேவை செய்ததற்காகவும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தியதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை, பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம் வழங்கினார்
மேலும், டி.ஆர்.டி.ஓ. செயலாளர் சதீஷ் ரெட்டி, கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் தலைவர் ராஜா சபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான ஷோபனா ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து துறைவாரியாக முதல் தரவரிசை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதன் மூலம் தனது பொறுப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களுக்காக அதிமுக அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என பெருமிதத்துடன் கூறினார். ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கை கல்வியையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
