உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் ஒருவர் தமது அலுவலகத்தில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கமலேஷ் திவாரி என்பவரை சந்திக்க வந்த இருவர் அவரது கழுத்தை வெட்டியதாகவும் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதல் மாடியில் இந்த கொலை சம்பவம் நடந்த போது கீழ்தளத்தில் திவாரியின் பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலையாளிகள் இருவரும் அவருக்கு தெரிந்தவர்கள் என்றும், திவாரியுடன் அவர்கள் தேநீர் அருந்தியதாகவும் தெரிவித்துள்ள போலீசார், கையில் வைத்திருந்த இனிப்பு பெட்டிக்குள் துப்பாக்கி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்த படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
