மலிவு விலை வீடுகள், கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜேட்லி, கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி, 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மலிவு விலை வீடுகளைப் பொறுத்தவரை கார்பெட் ஏரியா எனப்படும் வீட்டின் சரியான பரப்பரளவும் மற்றும் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டர் பரப்பளவில், 45 லட்சம் ரூபாய்க்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகள் என்ற பட்டியலுக்கு வரும் என்று அவர் கூறினார்.
அதே போன்று மெட்ரோ அல்லாத மற்ற நகரங்களில் 90 சதுர மீட்டர் கார்பட் ஏரியா மற்றும் 45 லட்சம் ரூபாய் விலைக்குள் கட்டப்படும் வீடுகள் மலிவு வீடுகளான கணக்கில் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அருண்ஜேட்லி கூறினார்.
