தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகளை மீண்டும் தொடரக்கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்த தகுதியுள்ள நபர்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் எனவும், நீர்நிலை போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்தி அவர்களில் தகுதியானவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவேண்டும் என்றும் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்திருந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இப்பணிகளை மீண்டும் தொடங்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு வரன்முறை திட்டங்கள் ஓராண்டு காலத்திற்குள் செயல்படுத்தப்படவேண்டும் எனவும் இந்த விலக்களிப்பு அதிகாரங்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
