திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
நீண்ட கால கோரிக்கையை ஏற்று இன்று இவ்விரு பொருட்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட நிலப் பகுதிக்கான தனிச்சிறப்புடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளித்து புவியியல் சார் குறியீடு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மற்றும் கைத்தறி கண்டாங்கி சேலைகள் போன்றவற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. சங்கரலிங்க ஆச்சாரி என்பவரால் தொடங்கப்பட்டு 5 கிராமங்களில் இத்தொழில் நடைபெறுகிறது. இங்கு 50 விதமான பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதே போன்று கைத்தறியால் நெசவு செய்யப்படும் கண்டாங்கி சேலைகளுக்கும் 150 ஆண்டுக்கால பாரம்பரியம் உள்ளது. செட்டி குலத்தவரின் தொழில் நேர்த்திக்கும் இது வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.
