பசியில்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். சாலையோரங்களில் ஆதரவின்றி வசிப்போர் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.
இப்படி ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்து பசியாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது “பசியில்லா நெல்லை” என்ற அமைப்பு. தொழிலதிபர் முகமது ரியாஸ் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஜா நகரில் உணவுப் பெட்டகம் ஒன்றைத் திறந்தார்.
மேலப்பாளையம் பஜார் திடலில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலக வளாகத்தில் 2வது உணவு பெட்டகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விரைவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உணவு பெட்டகங்களைத் திறக்கவும் பசியில்லா நெல்லை அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் … இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்…. என்று உயரிய தத்துவத்தின் அடிப்படையில் பசியாற்றும் இந்த அமைப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
