உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் மின்சாரமயாக்கப்பட்ட டீசல் ரெயில் என்ஜின் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாரணாசி: வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இங்குள்ள ரெயில் என்ஜின் தொழிற்சாலையில் மின்சாரமயாக்கப்பட்ட டீசல் ரெயில் என்ஜின் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மோடி அந்த என்ஜினுக்குள் சென்று பார்வையிட்டார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இலவச கியாஸ் இணைப்பு திட்டம் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் பலகோடி மக்கள் பலனடைந்துள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் மத்திய தரப்பினர் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் வளர்ச்சிக்காக இரண்டுகட்ட மேம்பாட்டு திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்து செல்கிறது. அதில் ஒருகட்டம் ரெயில்வே மற்றும் இணையதளச் சேவையை விரைவுப்படுத்துவது. அதன்படி, ரெயில்வே துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். ஆனால், இந்த ரெயிலையும் சிலர் கேலி செய்வது வேதனைக்குரியது. இது நமது நாட்டு பொறியாளர்களையும் பிற வல்லுனர்களையும் இழிவுப்படுத்தும் செயலாகும் எனவும் மோடி கூறினார்.
