நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களை ஓரிருநாட்களில் அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்திற்கு சரிந்துவிட்டது. இதனை சரிசெய்ய மத்திய அரசு மூன்று அம்ச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட், ஏற்றுமதியாளர்களுக்கு கடன் உள்ளிட்ட சலுகைகள், வங்கிகளுக்கு நிதி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கு நிதியுதவி, மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு சில திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு பரிமாற்றங்கள் மீதான சர்சார்ஜ் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் இரண்டரை கோடிக்கு அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் சர்சார்ஜ் 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 5 கோடிக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு அது 37 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 40 சதவீத சர்சார்ஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பும் வெளியானது.கடந்த வாரம் ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு மூன்று அம்ச திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
