வனப்பகுதிகள் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்க மத்திய அரசு 27 மாநில அரசுகளுக்கு 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.
மத்திய அரசு நேற்று இதற்கான நிதியை விடுவித்தது. காடுகள், பசுமைப் பிரதேசங்களில் தீ விபத்துகளைத் தவிர்க்கவும், வனவிலங்குகள் பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும். ஒடிசா, சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா ஆகிய வனப்பகுதிகள் மிக்க மாநிலங்களுக்கே இந்த நிதியில் பாதியளவுக்குப் போய் சேர்கிறது. நிதியுதவி பெறும் 27 மாநிலங்களில் நாகாலாந்தும் ஜம்முகாஷ்மீரும் இடம் பெறவில்லை. வனப் பகுதிகளில் தொழிற்சாலைகள், உள்கட்டமைப்புகள், சுரங்கம் போன்றவற்றை அமைத்தற்காக ஈடு செய்யும் வகையில் பல்வேறு அமைப்புகளிடமிருந்து 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனை வனத்துறை வளர்ச்சிக்கே செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த நிதியை வனத்துறை ஊழியர்களின் சம்பளம், பயணம் உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் வனப்பகுதிகளை மேம்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த நிதியை பயன்படுத்துவது தொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
