திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரில் முகாமிட்டிருந்த காட்டுயானை சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஊருக்குள் புகுந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பியை பிடித்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சின்னத்தம்பி யானையை பிடிக்கும்போது, அதை வனத்துறையினர் எந்த வகையிலும் துன்புறுத்தவோ காயம் ஏற்படுத்தவோ கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை மருத்துவ குழு, காவல்துறையினர் பாதுகாப்பு, கும்கி யானை, காட்டுயானை சின்னத்தம்பியை கொண்டு செல்வதற்கான வாகனம், யானையை வாகனத்தில் ஏற்றுவதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டு இந்த பணி தொடங்கியது.
அதிகாலை தொடங்கிய இந்த நடவடிக்கையில், வனத்துறை மருத்துவர் அசோகன், வன ஆலோசகர் தங்கராஜ் பன்னீர்செல்வம், மாவட்ட வன அலுவலர் திலீப் ஆகிய மூன்று பேரும் மயக்க ஊசி செலுத்துவதற்கான துப்பாக்கியுடன் மூன்று திசைகளில் தயாராக இருந்தனர்.
கரும்புக்காட்டில் இருந்து வெளியே வந்த சின்னதம்பியை நோக்கி 3 ஊசிகள் செலுத்தப்பட்ட நிலையில், ஒரு மயக்க ஊசி மட்டும் யானையின் பின்னங்காலில் பட்டது. இருப்பினும் யானை மயக்கம் அடையாமல் கரும்புக் காட்டுக்குள் சென்றுவிட்டது. அது மீண்டும் கரும்புக் காட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நான்காவதாக செலுத்தப்பட்ட மயக்க ஊசி, யானையின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்தது.
இதைத் தொடர்ந்து கரும்புக் காட்டுக்குள் புகுந்த சின்னத்தம்பி அரை மயக்க நிலைக்கு சென்றது. அதை கும்கி யானை கலீம் உதவியுடன், அருகில் வாழை தோப்பிற்கு கொண்டு வந்தனர்.
சின்னத்தம்பி கழுத்தில் கட்டபட்டிருந்த ரேடியோ காலரை அகற்றிய வனத்துறையினர், அதை லாரியில் ஏற்றிக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
