ஆந்திர மாநில சட்டப்பேரவையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையையும் தடுக்க இந்த மசோதா பயன்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றவையே, பள்ளி மற்றும் உயர்கல்வி ஒழுங்கு முறை மசோதாவின் நோக்கம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையிலான கமிஷன், பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன்ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
மசோதா குறித்து சட்டமன்றத்தில் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பலர் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அவற்றில் எல்.கே.ஜி, யூகே.ஜி வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
