கொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பெலியகட்டா 33 பள்ளி என்னுமிடத்தில் துர்கா பூஜைக்காக, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத சின்னங்கள் ஒளிரும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்துமதத்தின் ஓம் மந்திர இசையோடு, இஸ்லாமியர்களின் பாங்கு ஒலியும் இசைக்கப்பட்டது.
மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த பந்தல் மற்றும் இசைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த செயல் இந்துமத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி, வழக்கறிஞர் சாந்தனு சிங்கா என்பவர் விழாக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளார்.
சிறுபான்மையின மக்களை திருப்திபடுத்துவதற்காக விழாக்குழுவினர் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், அவர்களின் செயல் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதே சமயம் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தான் பந்தலை வடிவமைத்ததாகவும், இதனை தேவையில்லாமல் அரசியலாக்குவதாகவும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
