வர்த்தக போரை தீவிரப்படுத்தியிருக்கும் அமெரிக்கா, “நாணய மதிப்பை திரிக்கும் நாடு” என சீனாவை முத்திரை குத்தியுள்ளது. அதேசமயம் சீன நாணயமான யுவானின் மதிப்பு சரிவதை தடுத்து நிறுத்தாமல் விட்டுவிட்டதோடு, அமெரிக்காவிலிருந்து வேளாண் விளைபொருட்கள் இறக்குமதியையும் சீன அரசு நிறுத்தியுள்ளது.
சீன இறக்குமதிகள் மீது புதிதாக 10 சதவீத வரியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்ததை தொடர்ந்து இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடியாக சீனா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சீன ஏற்றுமதியாளர்கள் ஆதாயம் அடையும் வகையில், யுவானின் மதிப்பை சீனா குறைக்கக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
சீனா வசமுள்ள பொருளாதார ஆயுதங்களிலேயே நாணய மதிப்பிறக்கம் வலிமை வாய்ந்தது என்றும் வல்லுநர்கள் கூறியிருந்தனர். டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 6.9 ஆக இருந்த நிலையில், அதை 7 ஆக சீன மத்திய வங்கி நிர்ணயித்தது. அதாவது யுவானின் மதிப்பை 2 சதவீதம் அளவுக்கு சீனா குறைத்தது.
முன்னர் 6.9 யுவான் கொடுத்தால் ஒரு டாலர் வாங்க முடியும் என்ற நிலையில், நாணய மதிப்பிறக்கத்திற்குப் பிறகு 7 யுவான் கொடுத்தால்தான் ஒரு டாலருக்கு பரிவர்த்தனை செய்ய முடியும். இப்படி நாணய மதிப்பிறக்கம் செய்வதன் மூலம், புதிய வரி விதிப்பிற்குப் பிறகும் சீன இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் மலிவாகவே இருக்கும்.
புதிய வரி விதிப்புக்கு முன்னர் ஒரு டாலர் என்பது 6.9 யுவானுக்கு சமம் என்றால், நாணய மதிப்பிறக்கத்திற்குப் பிறகு ஒரு டாலர் 7 யுவானுக்கு சமமாகி விடுகிறது. எனவே புதிய வரி விதிப்பினால் ஏற்படும் கூடுதல் சுமை, நாணய மதிப்பிறக்கத்தின் மூலம் அகற்றப்பட்டு விடுகிறது.
அதாவது புதிய வரி விதிப்பிற்குப் பிறகும், பழைய விலையிலேயே பொருட்களை இறக்குமதி செய்துகொள்வதற்கு சமமாகி விடும். அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறையால், சீனா ஏற்றுமதி செய்வதைவிட, அந்நாட்டிற்கு அமெரிக்கா பல மடங்கு குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது. எனவே டாலருக்கு நிகரான தனது நாணய மதிப்பை சீனா குறைப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது.
சீனாவுக்கும் அந்நியச் செலாவணியாக டாலர் வரத்தில் பாதிப்பு இருக்காது. சீன ஏற்றுமதியாளர்கள் ஊக்கம் பெறுவதுடன், வெளிநாட்டுப் போட்டிகளையும் தடுக்க முடியும். இந்த பின்னணியில், யுவானின் மதிப்பை சீனா குறைத்ததுடன், அமெரிக்கா வேளாண் விளைபொருட்கள் இறக்குமதியையும் நிறுத்தியுள்ளது. இதன் மூலம், டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பணிந்து செல்வதைவிட, உறுதியாக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது என சீனா முடிவு செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆனால், யுவானின் மதிப்பிறக்கத்தால், உலகம் முழுவதும் நேற்று பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, “நாணய மதிப்பை திரிக்கும் நாடு சீனா” என அமெரிக்க மத்திய வங்கி முத்திரை குத்தியுள்ளது.
சீனாவின் மீது இப்படி அதிகாரப்பூர்வமாக முத்திரை குத்துவதன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை நியாயப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் இதை பயன்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான போட்டியை சீர்குலைக்கும் வகையில், நியாயமற்ற வகையில் சீனா நடந்துகொள்வதாக ஐஎம்எஃபில் புகார் அளிக்க உள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை சீனா நீண்ட காலமாக எடுத்துச் செல்கிறது என்பதையே நாணய மதிப்பிறக்கம் காட்டுவதாக, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு தனது நாணய மதிப்பை சீனா சரித்துள்ளது என்றும், இதுதான் நாணய மதிப்பதை திரிப்பது என அழைக்கப்படுகிறது என்றும் ட்விட்டர் பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த மிகப்பெரிய விதி மீறல், காலப்போக்கில் சீனாவை மிகவும் பலவீனமடையச் செய்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இந்த நடவடிக்கையால், அமெரிக்கர்கள் தங்கள் பணத்தை வரிகளுக்காக செலவிடவில்லை, சீனாவுக்கு பரிசளிக்கும் வகையிலேயே தங்கள் பணத்தை செலவிடுகின்றனர் என்பது பகிரங்கமாகியுள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தொழில்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் கூலி விகிதத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், நாணய மதிப்பை குறைக்கும் வேலையை சீனா செய்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நாணய மதிப்பை திரிப்பதன் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவிலிருந்து சீனா எடுத்துச் செல்கிறது என்றும், இதை தொடர்ந்து செய்வதே அந்நாட்டின் உள்நோக்கம் எனவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தடுத்து நிறுத்தியிருக்கப்பட வேண்டிய இந்த போக்கை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான போக்கு, வர்த்தகக் காப்புக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு உயர்வு காரணமாகவே, யுவானின் நாணய மதிப்பு சரிந்துள்ளது என்றும், நாணய மதிப்பை நியாயமாகவும், சமநிலை தவறாலும் வைத்துக் கொள்ள தங்களால் முடியும் என்றும் சீன மத்திய வங்கி கூறியுள்ளது.
