பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் பஞ்சாப் மாநிலத்துக்கு ஆயுதங்கள் கொண்டுவந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப்பை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவரும் காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கம், பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இயங்கிவரும் சில தீவிரவாத அமைப்புகள் ஆதரவுடன் இந்தியாவிற்கு ஆயுதம் கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டார்ன் தரன் மாவட்டத்தில் பஞ்சாப் பதிவெண் கொண்ட வெள்ளைநிற மாருதி காரில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் மறித்து விசாரணை நடத்தியதில் ஆயுதங்கள் கடத்தியது தெரியவந்தது.
காரில் இருந்தவர்களிடம் இருந்து ஏகே-47 ரக இயந்திர துப்பாக்கிகள், செயற்கைக்கோள் கைபேசிகள், கையெறி குண்டுகள், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பஞ்சாப் மாநில போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
ஆயுதங்கள் ட்ரோன் உதவியுடன் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பஞ்சாப் மாநில போலீஸ் உயரதிகாரி தெரிவிக்கிறார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
