2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவரைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தொடர்புடைய மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியில் வசித்து வந்தவருடைய 10 வயது மகளும் 7 வயது மகனும் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று வழக்கம் போல தனியார் வேனில் பள்ளிக்குச்சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை. வேன் ஓட்டுநரான மோகன்ராஜ் என்ற மோகன கிருஷ்ணன் குழந்தைகளின் தந்தையைத் தொடர்பு கொண்டு, குழந்தைகளை கடத்தி விட்டதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான்.
இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பேரில் கோவை வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளை தேடி வந்த நிலையில், பொள்ளாச்சி பி.ஏ.பி. வாய்க்கால் கரையில், குழந்தைகளின் பள்ளிப் பைகள், டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை கிடைத்தன. மறுநாள் வாய்க்காலில் குழந்தைகள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இதையடுத்து மோகன் ராஜையும், உடந்தையாக இருந்த மனோகரனையும் கைது செய்து விசாரித்த போது, பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இருவரையும் தீபாளப்பட்டி அணைப் பகுதியில் உயிருடன் வீசிக் கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது காவல் ஆய்வாளர் ஒருவரின் துப்பாக்கியை பறித்த மோகன்ராஜ் போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் மனோகரனுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதற்கு எதிராக மனோகரன் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த பலாத்காரக் கொலையை, ஒரு விதமான உணர்ச்சி வசத்தினாலோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டதாலோ, அல்லது யாரோ ஒருவர் தூண்டிவிட்ட கோபத்தினாலோ குற்றவாளிகள் செய்யவில்லை என்பது புலனாவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடத்தல் குற்றத்தையும், பாலியல் பலாத்கார குற்றத்தையும் மறைப்பதற்காகவே இரு குழந்தைகளையும் உயிரோடு தண்ணீரில் தள்ளி கொலை செய்துள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளியான 23 வயது மனோகரன் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அவன் தவறை திருத்திக் கொள்ள முயற்சி எடுத்துள்ளான் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று திட்டவட்டமாய் தெரிவித்துள்ள நீதிபதிகள்,
காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன்தான் அனைத்து குற்றத்தையும் செய்துள்ளான் என்று இறந்து போனவன் மீது பழி போட்டு, தப்பித்துக் கொள்ள முயற்சித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளிகள் இருவரும் அந்த பெண் குழந்தையை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, கதறி அழுத குழந்தை மீது இரக்கம் கொண்டு அவர்களை உயிரோடு விட்டு இருக்கலாம். ஆனால் அதை இவர்கள் செய்யவில்லை. மாறாக அணைக்கட்டில், ஓடும் தண்ணீரில், குழந்தைகளை உயிரோடு தள்ளி விட்டு, கொடூரமாக கொலை செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.
ஒரு வழக்கில், 10 வயது சிறுவனை பணத்துக்காக கடத்திக் கொலை செய்த ஒரு குற்றவாளிக்கு, அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனையை வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது, ஒரு குழந்தையை கொலை செய்தவனுக்கே உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருக்கும்போது, இந்த வழக்கில் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றத்தன்மையை பார்க்கும்போது, மனுதாரர் மனோகரன், இந்த சமுதாயத்தின் தீயசக்தியாக உள்ளான். அவனுக்கு இரக்கம் காட்ட முடியாது. எனவே அவனுக்கு, கீழ் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
