தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அதனால்தான், “தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மனக்குகையில் சிறுத்தையில் எழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டினார் பாவேந்தர். பகுத்தறிவு பகலவன் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அவரைப் போற்றுகிறது. 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த தந்தை பெரியாரின்
141ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
