வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட இங்கிலாந்து, அமெரிக்கா துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி புறப்பட்டார். இந்த பயணத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
அத்துடன் பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை பார்வையிட்டு அதனை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளையும் அவர் கேட்டறிந்தார்.
அமெரிக்காவில் இருந்து நேற்று துபாய் வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் தொழில்முனைவோரை அவர் சந்தித்துப் பேசுகிறார். 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாளை அதிகாலை 2.40 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்புகிறார்.
