சந்திரயான் விண்கலம் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை செலுத்த ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தன.
நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கிய 20 மணி நேர கவுன்ட் டவுன் முடிந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்கலத்தை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்கலம் ஏவப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்னதாக திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் டிவிட்டர் செய்தியை வாசித்தார்.
கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராக்கெட் பயன்படுத்தப்பட இருந்தது.
திட மற்றும் திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டால்தான் இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்த முடியும். குறிப்பாக ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் ஹீலியம் அடங்கி திரவ எரிபொருட்கள் விண்கலம் ஏவப்படுவதற்கு ஒருசில மணிநேரத்திற்கு முன்னதாகத்தான் நிரப்பப்படும்.
திரவ எரிபொருட்கள் நிரப்பும் பணி நள்ளிரவு ஒரு மணியளவில் முடிவடைந்த நிலையில், அடுத்த 50 நிமிடங்களில் விண்கலம் ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீலியம் எரிபொருள் கசிவுதான் இதற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கசிவை சரிசெய்யாமல் விண்கலத்தை ஏவினால், வெடித்து சிதறும் அபாயமும் உள்ளது. எனவேதான், கடைசி நேரத்தில் கடுமையாகப் போராடி சரிசெய்ய முடியாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று சந்திராயன் 1 விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பாக லேசான எரிபொருள் கசிவு இருந்தாகவும், ஆனால் அது சரிசெய்யப்பட்டு, விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது விண்கலத்தில் நிரப்பப்பட்டுள்ள எரிபொருட்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, பின்னர் கசிவுக்கான காரணம் கண்டறிந்து அது சீர் செய்யப்படும்.
இதன் பின்னரே 3 வாரம் முதல் 6 மாதத்திற்குள் விண்கலம் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்காலிகப் பின்னடைவுதானே தவிர, விண்கலம் ஏவுவதில் தோல்வி என கருதக்கூடாது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் சந்திராயன் 1 போலவே சந்திராயன் 2ம் விரைவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
