வங்க தேசத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் புறப்பட்ட பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
BG 147 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் காக்பிட் அறையில் புகுந்த ஒருவன், துப்பாக்கி முனையில் விமானிகளை மிரட்டி விமானத்தைக் கடத்த முற்பட்டுள்ளான். இந்நிலையில், சிட்டகாங்கில் அந்த விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த இருவரும், துப்பாக்கியை வைத்து மிரட்டிய நபரும் மட்டும் உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தவிருப்பதாக மும்பையில் மர்ம நபர் தொலைபேசி மூலம் தகவல் விடுத்த நிலையில் இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
