பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைத்து “உழவர் திருவிழா 2019” என்ற பெயரில் பொங்கல் நிகழ்வு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு பஹ்ரைன் வேலை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் கீழ் செயல்படும் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தது. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு அந்நிய நாட்டின் அமைச்சகம் பொங்கல் விழாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான அலங்காரங்களுடன் 16 மீட்டர் இராட்சச பானரில் பொங்கலின் சிறப்பம்சங்கள் அடங்கிய விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் “பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் குடில்” என்ற பெயரில் விவசாய நிலம், குடிசை, பசு மாடு, ஜல்லிக்கட்டு மாடு, வண்டி, மரங்கள் தமிழரின் உடல்பயிற்சி கருவியான கரலக்கட்டை, பெண்கள் புத்திக்கூர்மையை மேன்படுத்த விளையாடும் பல்லாங்குழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் விதத்தில் மாதிரிகள் செய்து வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி முழுவதையும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் வளர்ச்சித்துறை செயலாளர் பஞ்சு இராஜ்குமார் மற்றும் மூத்த உறுப்பினர் பட்டிமன்றம் புகழ் பவானி பிரேமானந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
காலை 7 மணிக்கு கோலப் போட்டியுடன் தொடங்கி பின்பு விறகடுப்பில் 11 மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் பொறுப்பாளராக செயல்பட்டு, பொங்கல் பொங்கியதும் பெண்கள் ஒன்றுகூடி குழவி சத்தமிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் ஆதிப்பறை இசை குழுவினரின் பறையிசையுடன் கலை நிகழ்சிகள் தொடங்கி கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கிராமிய ஆடல் பாடல் உட்பட பஹ்ரைன் தமிழர் வரலாற்றில் முதன் முறையாக மாடு ஆட்டம், பொய் கால் குதிரை ஆட்டம் நடைபெற்றது. இவற்றில் பங்கெடுத்த கலைஞர்கள் அனைவரும் பஹ்ரைனில் வசிப்பவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
முக்கியஸ்தர்கள் அனைவரையும் விழா பொறுப்பாளர் முகமது அபுசாலி வரவேற்றார். பஹ்ரைன் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பொறியாளர் ஹுசைன் ஜவாத் அல்-லைத் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டதுடன் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் தொகுத்த “இந்திய சுதந்திர போரில் தமிழரின் பங்கு” என்ற நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பாக தொடகப்பட்ட 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ குழுவை எசிஇ ஹெல்த்கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார மருத்துவர் ஜகதீஷ் கரிமுட் தொடங்கி வைத்தார். 2019க்கான தமிழ் காலண்டரை கிரௌன் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் எஸ். இணையதுல்லா அவர்கள் வெளியிட்டார்.
ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகளுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் விளையாட்டுத்துறை செயலாளர்கள் முத்து, பாபு மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோர் பொறுப்பேற்று உறியடித்தல், கயிறு இழுத்தல், ரொட்டி கவ்வுதல், கனியும் கரண்டியும், உருளை கிழங்கு சேகரித்தல், கயிறு தாண்டுதல், சாக்கு ஓட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பஹ்ரைன் வாழ் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பேசும்போது “தமிழரின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் வகையில் 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறோம், அது மட்டுமல்லாமல் இரத்த தானம், மருத்துவ முகாம், வேலை வாய்ப்பு தொழிலாளர் நலன் போன்ற பல சேவைகளை செய்து வருகிறோம். பஹ்ரைன் வாழ் தமிழர்கள் 35362495 என்ற என்னில் 24×7 தொடர்பு கொள்ளலாம். விரைவில் புத்தி கூர்மையை மென்படுத்தும் மகளிருக்கான பல்லாங்குழி தொடர் போட்டி நடத்தவிருக்கிறோம்” என்று கூறினார். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் க. செந்தில் குமார் நன்றியுரை கூறும்போது “இந்த வண்ண மயமான நிகழ்ச்சி நாம் உயிர் வாழ உணவளிக்கும் உழவரின் திருநாளாக அமைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
சுமார் 6000 தமிழர்கள் கலந்தகொண்ட விழாவில் அனைவருக்கும் வாழை இலையில் 19 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் விழா குழுவினருக்கு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் வெகுவாக பாராட்டினர்.
International News Desk, Bahrain
Mr.Sisel Panayil Soman, COO – Middle East
