மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை பெருநகரில் மட்டும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடையும் வரை, டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, புனே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பிற பகுதிகளிலும், தேர்தலையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திலும், நாளை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வருகிற 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
