ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற “பாரதி யார்?’ என்ற நாடகம் பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வில் சென்னை எஸ்.பி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் “பாரதி யார்?’ என்ற இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடைபெற்றது.
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்தார். இயக்குநர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். நாடக நிகழ்வுக்குத் தலைமை வகித்து நடிகர் சிவகுமார் பேசியதாவது: பாரதி கணிதத்திலும், ஆங்கிலத்திலும் பெரிய மேதையாக வர வேண்டும் என்று அவருடைய தந்தை ஆசைப்பட்டார். ஆனால், அவர் தனது நண்பரான சோமசுந்தர பாரதியை கூட்டிக்கொண்டு கோயில் மண்டபங்களில் ஒளிந்து, கம்ப ராமாயணத்தையும், திருக்குறளையும் படித்தார். 11 வயது இருக்கிறபோது சுப்பையா என்கிற பாரதி, பாரதி என்று போற்றப்பட்டார். 15 வயதில் பாரதிக்கு செல்லம்மாள் உடன் திருமணம் ஆனது.
மதுரைக்கு வந்து சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக 3 மாதங்கள் பணியாற்றினார். 1904இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். 1908}இல் திலகர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பர்மாவில் 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அதனால் பாரதியையும் கைது செய்து விடுவார்கள் என்று எண்ணிய அவருடைய நண்பர்கள் அவரைப் புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு குவளைக்கண்ணனும், சுந்தரேச அய்யரும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வாஞ்சிநாதன் குருவாக இருந்த நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஆங்கிலேயர்கள் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தனர். தண்டனை முடிந்து வெளியில் வந்த அவர் உணவுக்கே வழியில்லாத நிலையில் பாரதி வீட்டுக்கு செல்கிறார்.
அப்போது நீலகண்ட பிரம்மச்சாரி நிலையைப் பார்த்த பாரதி தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாட்டை எழுதினார்.
ஈரோடு கருங்கல்பாளையம் வந்து மனிதருக்கு மரணமில்லை என்ற உரையை நிகழ்த்தினார். 1921 செப்டம்பர் 11ஆம் தேதி பாரதி இறந்தார். பாரதி தாலாட்டைத் தவிர அனைத்தும் எழுதி உள்ளார். பாரத நாடு, பாரத தாய், ரோமாபுரியுடன் வாணிபம் செய்தது, தேசிய ஒருமைப்பாடு, நதி நீர் திட்டம், சேது சமுத்திர திட்டம், அந்நிய ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை தனது பாட்டின் மூலம் பாரதி தெளிவுபடுத்தியுள்ளார் என்றார்.
பாரதியை வணங்க வைத்த நாடகம்: “பாரதி யார்?’ என்ற நாடகத்துக்கு ஈரோடு புத்தகத் திருவிழா 25 ஆவது மேடை என நாடகம் தொடங்கும் போது தெரிவிக்கப்பட்டது.பாரதியின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்டுகளைக் குறிப்பிட்டு முக்கிய நிகழ்வுகள், பாரதியின் பாடல்கள், நடனம் மற்றும் அழுத்தமான வசனங்களுடன் காட்சிகள் இருந்தன.
1907 இல் சென்னையில் நடந்த சுதந்திரப் போராட்ட பொதுக்கூட்ட நிகழ்வுக்கு பாரதி வருகிறார் என்ற காட்சியில் பாரதிக்காக மேடையில் இருந்தவர்கள் ஆவலுடன் காத்திருக்க, பாரதி வேடமணிந்தவர் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் இருந்து நடந்து மேடைக்கு வருவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் எழுந்து நின்று பாரதி வேடமணிந்தவரை கைகூப்பி வணங்கினர். நாடகம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. பாரதி வேடத்தில் இசைக்கவி ரமணன் நடித்தார்.
ஏ.பி.நாகராஜன் குறித்த புத்தகம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அக்கம்மாபேட்டை என்ற கிராமத்தில் பிறந்தவர் ஏ.பி.நாகராஜன், அவர் குறித்த புத்தகம் நாடக நிகழ்வுக்குப் பிறகு மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் புத்தகத்தை பொதுமக்கள் மேடைக்கு சென்று வாங்கிக்கொண்டு சிவகுமாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
புத்தகத் திருவிழாவில் இன்று
ஈரோடு புத்தகத் திருவிழா மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறும் நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அறிவியலும் மானுடமும்: நேற்று}இன்று}நாளை என்ற தலைப்பில் பேசுகிறார். பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பங்கேற்று, புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கான அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதினை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்.
