தொடங்கிய 22 நாட்களில் அமர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு மொத்தமாக 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்தனர். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீடிக்கிறது. 46 நாட்களில் 22 நாட்கள் கடந்த நிலையிலேயே இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் தரிசனம் மேற்கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க மேலும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பயணத்தின் பல்வேறு இடர்களிலும், யாத்ரீகர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லைக் காவலர்கள் உதவி வருகின்றனர்.
