தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரி மாநிலம் தமிழகம்- முதல்வர் எடப்பாடி
மதுரை: தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்பிபிஎஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான நன்றி. ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க வந்துள்ளார் மோடி என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொற்று மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது, சிகிச்சையளிப்பதில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது. மகப்பேறு நலத்திட்டங்கள், குழந்தை நலத்திட்டங்களை சிறப்பாக செயலாற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் 3 முன்னிலை மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும் என எடப்பாடி பேசினார்.
