சென்னை நந்தனத்தில், 2 இளம்பெண்களுடன் இளைஞர் வந்த இருசக்கர வாகனம், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசி, சாலையில் சறுக்கி விழுந்ததில், மாநகரப்பேருந்தின் சக்கரங்களில் சிக்கி 2 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த, சிவா, பவானி, நாகலட்சுமி ஆகிய மூன்று பேரும் சென்னை எழும்பூரில் உள்ள perfcect calibration என்ற நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
22 வயதுடைய மூவரும், இன்று காலை, பல்சர் இருசக்கர வாகனத்தில் வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு எழும்பூர் நோக்கி சென்றுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிவா மட்டும் தலைக்கவசம் அணிந்திருந்தார்.
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இரு இளம்பெண்களும் தலைக்கவசம் அணியவில்லை. காலை 9.30 மணிக்கு, நந்தனம் கலைக்கல்லூரி எதிரே, அண்ணா சாலையில் சென்றபோது, நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் விபத்து நேரிட்டது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மேற்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற 15ஏ மாநகரப்பேருந்தின் பக்கவாட்டில் மூவரும் செல்லும் பல்சர் இருசக்கர வாகனம், அருகே மற்றொரு இருசக்கர வாகனமும் செல்கின்றன.
பேருந்துக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்திற்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில், பல்சர் பைக் முந்திச்செல்ல முயற்சிக்கிறது. அப்போது, அருகில் உள்ள இருசக்கரவாகனத்தின் மீது பல்சரின் பம்பர் இடித்து, பல்சர் பைக்கில் சென்ற மூவரும் நிலைதடுமாறி சாலையில் வலதுபுறமாக விழுகின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பேருந்து மூவர் மீதும் ஏறி இறங்கியதில், இளம்பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
பல்சர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சிவா படுகாயங்களுடன், ஆபத்தான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்து குறித்து வாகன ஓட்டிகளிடமும் விசாரணை நடத்தினர்.
விபத்தில் சிக்கிய மூவரும் வந்த பல்சர் பைக், வழிநெடுகிலும் பல வாகனங்களை ஓவர்டேக் செய்தபடியே சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பேருந்துக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்திற்கும் இடையே இருந்த குறுகிய இடைவெளியில் ஓவர்டேக் செய்ய முயற்சித்தது விபத்துக்கு காரணமாகியுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து நடந்த தருணத்தில், பக்கவாட்டு தெருவில் இருந்து ஒரு ஆட்டோ அண்ணா சாலைக்கு வருகிறது. அதைப் பார்த்ததும் சக இருசக்கர வாகன ஓட்டி, வேகத்தை சற்றே குறைக்க முயற்சி செய்கிறார். அந்த தருணத்தில்தான் ஓவர்டேக் செய்ய முயற்சி செய்யும் பல்சர் பைக், நிலைகுலைந்து சறுக்கி அதில் பயணித்த மூவரும் சாலையில் விழுகின்றனர்.
இதுபோன்ற விபத்தின் சிசிடிவி காட்சிகள், விபத்து எப்படி நடைபெற்றது என்பதை தெளிவாகக் காட்டுவதோடு, யார் மீது தவறு, எப்படிப்பட்ட தவறால் விபத்து நேர்ந்தது என்பதையும், மற்றவர்களுக்கு பாடங்களையும் வழங்குகிறது.
அண்ணா சாலை போன்ற போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிவேகமாக செல்வது, விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வது, சாகசத்தில் ஈடுபடுவதுபோல குறுகிய இடைவெளிகளில் முந்திச்செல்ல முயற்சி செய்வது உயிருக்கு ஆபத்தாகவே முடியும்.
சாலை விபத்துகளில் 98 சதவீத உயிரிழப்புகளுக்கு தலைக்கவசம் அணியாமல் இருப்பதே காரணமாகி விடுவதை சுட்டிக்காட்டும் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணிவதோடு, இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லக்கூடாது என்பன போன்ற விதிகளை மதித்து நடந்துகொள்வதும் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் என அறிவுறுத்துகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டியின் முந்திச்செல்லும் முயற்சியில், நொடியில் மரணத்தை தழுவிய இரண்டு இளம்பெண்களின் உயிரிழப்பு சோகத்தை மட்டுமல்ல சாலையில் பயணிப்பவர்களுக்கு மறக்கக்கூடாத பாடத்தையும் வழங்கியுள்ளது.
