ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் மற்றும் மலேசியப் பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அணு சக்தி தொடர்பு முனையங்கள், தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
விளாடிவோஸ்டக் நகரில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மண்டல மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
