கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் நீர் வந்துகொண்டு இருப்பதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதியான கர்நாடகத்தின் குடகு மலைப்பகுதியில் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே பெய்த கனமழையின் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மொத்தம் 84 அடி உயரம் கொண்ட கபினி அணையில் தற்போது நீர்மட்டம் 83 புள்ளி 4 அடியாக உள்ளது. 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 124 புள்ளி 8 அடியாக உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கனமழை பெய்வதால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து நொடிக்கு 10,000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 30,000 கன அடியும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த இரு நாட்களில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும். அதன்பின்பு ஒகேனக்கல் வழியாக நான்காவது நாளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 116 புள்ளி 20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 10 ஆயிரத்து 235 கன அடியாகவும், நீர் திறப்பு நொடிக்கு 18 ஆயிரத்து 800 கன அடியாகவும் உள்ளது.
