விஷ்ணு காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவத்தின் நிறைவு நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று நள்ளிரவுடன் அத்திவரதர் பெருமான் தரிசனம் நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

காஞ்சி வரதராஜர் கோவிலில் உள்ள ஆதிமூலவரான ஆதிஅத்திவரதர் விக்ரகம், கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், தனி நீரடி மண்டபத்தில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே எழுந்தருளச் செய்யப்படும்.
அவ்வாறு 40 ஆண்டுகள் கழித்து, இந்த வருடம், அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்று, நேற்றுடன் தரிசனம் நிறைவடைந்தது. அத்திவரதர் பெருமான் முதல் 31 நாட்கள் சயனக்கோலத்தில் காட்சி தந்தார். பின்னர் ஆக.1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தரிசனம் அளித்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சேவை என்பதால், ஒவ்வொருநாளும் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் பெரும் அளவில் காஞ்சியில் குவிந்தனர். அத்திவரதர் விழாவின் கடைசி தரிசன நாளான 47-வது நாள் நேற்று சுமார் 5 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
முன்னதாக நேற்று விஐபி., தரிசனம் ரத்து செய்யப் பட்டு, கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனப் பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறு நள்ளிரவைக் கடந்தும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பொதுதரிசனப் பாதையில் வந்தவர்கள் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்துவிட்டுத் திரும்பியதாகக் கூறினர். நேற்று காஞ்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் காத்திருந்து, அத்திரவரதரை தரிசித்தனர்.
இரவு 9 மணிக்கு வரதராஜப் பெருமாள் கோவில் கிழக்கு ராஜகோபுர நடை சாத்தப்பட்டது. பின்னர் கோவிலின் உள் பிராகாரத்தில் காத்திருந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். நேற்று இறுதிநாள் என்பதால், நள்ளிரவுக்குப் பிறகும் அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணி அளவில் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது.
இந்த முறை அத்திவரதரை ஒரு கோடியே 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். அத்திவரதர் வைபவத்தின் இறுதி நாளான இன்று காலை சிறப்பு பூஜையும், யாகமும் நடத்தப்பட்டது. இன்று இரவு 9 மணிக்கு அத்திவரதரை அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளச் செய்யும் பணி தொடங்கும். இன்று இரவு 11 மணிக்கு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்துள் எழுந்தருளச் செய்யப் படுவார். இந்தப் பணியில் கோவிலைச் சார்ந்த பட்டாச்சார்யர்கள் உள்பட 80 பேர் ஈடுபடுவர் என்று அதிகாரிகள் கூறினர்.
அத்தி வரதர் விக்ரகத்தை திருக்குளத்துக்குள் மீண்டும் எழுந்தருளச் செய்வது எப்படி என்பது குறித்து கோவில் பட்டர் ஸ்ரீவத்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

இன்று இரவு நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 48 நாட்கள் அத்திவரதர் அன்பர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அனந்தசரஸ் திருக்குளத்தில் மீண்டும் எழுந்தருள செய்யப்பட உள்ளார். காலை மற்றும் மாலை நித்திய பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு மேல் தைலக்காப்பு அணிவிக்கப்படும். பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் உள்ளிட்டவை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்தி வரதர் விக்கிரகத்தின் மீது பூசப்படும்.
அத்தி மரத்தினால் ஆன விக்ரகம் என்பதால் அதை தண்ணீருக்குள் வைக்கும் போது அடுத்த 40 ஆண்டுகளில் வலுவாக இருக்க வேண்டும்; அறிவியல் ரீதியாகவும் சாஸ்திர ரீதியாகவும் பார்த்தால் தண்ணீருக்குள் விக்ரகம் இருக்கும் போது அதன் அருகே மீன் பாம்பு போன்றவை செல்ல வாய்ப்பு உண்டு! அவை விக்ரகத்தின்மீது உரசும்போது சேதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு!
இது போன்ற தைலங்கள் தடவப்படுவதால் மீன் பாம்பு உள்ளிட்டவை விக்கிரகத்துக்கு அருகே செல்லாது. இன்று மாலை பூஜைக்குப் பின் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, இரவு பத்து மணியிலிருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் சயன நிலையில் எழுந்தருள செய்யப்படுவார்!
செங்கல் தரையில்தான் அத்திவரதர் சயனித்திருப்பார். விக்ரகத்தின் தலைக்கு அடியில் கருங்கல் உள்ளது! விக்கிரகம் வைக்கப்படும்போது வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்! ஒரு சில அர்ச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்!
கடந்த 79 ஆம் ஆண்டு அத்தி வரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இப்போது தரிசனம் செய்து இருக்கிறார்கள்! நேரில் வந்து தரிசனம் செய்ய இயலாதவர்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தரிசித்தனர் !அடுத்த 40 ஆண்டுகளில் அவர் நம்முடனேயே இருப்பார்! உலகை சுபிட்சமாக வைத்திருப்பார் என்று கூறினார் ஸ்ரீவத்சன்!
