பசுமை வழிச்சாலை திட்ட விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் ஆகஸ்ட் 7ம் தேதி ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயரநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தது.இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களான மத்திய அரசு, தமிழக அரசு, விவசாயிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இத்திட்டத்தை செயல்படுத்த நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருப்பதாக விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மனுக்களையும் விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அனைத்து மனுக்களையும் இணைத்து ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
