வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சாலைகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். மழைநீர் வழிந்தோடி செல்ல வழியில்லாததால், இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சாலைகளில் சென்ற கார்கள் இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கி நின்றது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆர்லிங்டனில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் மேற்கூரை வழியாக தண்ணீர் கொட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணியாளர்களும் களமிறக்கப்பட்டனர். சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
நீரிறைக்கும் எந்திரங்கள் மூலம் நீரைவெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை, திடீர்வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளை மாளிகையின் தரைகீழ் தளத்தில் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
திடீர்வெள்ளப்பெருக்கால் சாலைகள், சில கட்டுமானங்கள், வாகனங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளபோதிலும், யாருக்கும் காயமோ வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
