புதுச்சேரியில் முறையாகப் பராமரிக்கப்படாததால் ஊசுடு ஏரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டு, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
600 ஏக்கர் பரப்பளவில் கடல் போல் பரந்து விரிந்து காட்சியளித்த ஊசுடு ஏரி, படிபடிப்படியாக வறட்சி கண்டு தற்போது குட்டை போல் தோற்றமளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எப்போதும் வற்றாத இந்த ஏரியானது பறவைகள் சரணாலயமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசால் அறிவிக்கப்படடுள்ளது.
ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து செல்வது வழக்கம். தற்சமயம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் பறவைகளின் வரத்து பெருமளவு குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். .
கடந்த ஆண்டுகளில் ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறும் பொதுமக்கள், புதுச்சேரி அரசு இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
