கோவை அன்னூரில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருபவர் கனகராஜ். அவரது மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அம்ருதா இருவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காஞ்சனாவின் தாய் வீடான விளாங்குறிச்சிக்கு வந்துள்ளனர்.
வீட்டில் காஞ்சனாவின் தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோர் இருந்த நிலையில், இரவு காஞ்சனா அருகில் குழந்தை அம்ருதா உறங்கிக் கொண்டிருந்தது. காலை 4.30 மணியளவில் பால்காரர் வந்து எழுப்பியபோது, தன் பக்கத்தில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை என்று காஞ்சனா கூச்சல் போட்டுள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்து குழந்தை கிடைக்காததால், போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டின் எதிரே புதர்மண்டிய பகுதியிலுள்ள பாழுங்கிணறு ஒன்றில் குழந்தை அம்ருதா வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து குழந்தை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
