சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மக்கள் தவித்து வந்தனர். இதுமட்டும் அல்லாமல், நாளுக்கு நாள் வெப்பமும் அதிகரித்து வந்தது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே எஞ்சியது. இந்த நிலையில், இன்று சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தரமணி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கருமேகங்கள் சூழ்ந்து இதமான காற்றுடன் பெய்த மழையால் மக்கள் மனம் குளிர்ந்தது. வெப்பமும் தணிந்தது.
மழை நீரைக் கண்ட சிறுவர்கள், உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கனமழை பெய்தது. கனமழையால் சாலை ஓரம் தண்ணீர் தேங்கியது.
