புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜம்மு–காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
பாலம் விமான நிலையத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் விமானத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.
வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவரான அஜித்குமார் ஆசாத் உடல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ நகருக்கு காலை 7 மணியளவில் கொண்டுவரப்பட்டது. உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வீரமரணமடைந்த ரமேஷ் யாதவின் உடல், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு காலை 8.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது. கையில் தேசியக் கொடிகளுடனும், மலர்களுடனும் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
வீரமரணமடைந்த ரோஹித்தாஸ் லம்பா உடல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்புராவுக்கு காலை 8.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
உயிர்த்தியாகம் செய்த வீரர் மோகன்லால் உடல், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது மகள் தந்தையின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
வீரர் மோகன்லால் உடலுக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
