சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்ததற்கு மோடியின் தூண்டலும் ஒரு முக்கியமான காரணம் என சவுதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் கலீத் ஏ அல்-ஃபலீ தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் நிதிப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதேசமயம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது. இந்நிலையில் மோடி சர்வதேச எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவன அதிகாரிகள் மற்றும் இந்திய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அதில் டாலரில் மட்டுமே வாங்கப்படும் எண்ணெயை இந்திய கரன்சியில் வாங்கினால் பண மதிப்பிழப்பு இந்தியாவிற்கு குறையும் போன்ற பல விஷயங்களை எடுத்துரைத்தார். அதுமட்டுமில்லாமல் எரிவாயு அகழ்வில் உள்ள பல புதிய நிறுவனங்கள் கொள்கை மாற்றங்களை செய்த போதிலும் இந்தியாவிற்கு வராத காரணங்களை ஆராய வேண்டும் என்றார். எண்ணெய் விலை பிரச்சனைக்கு ஏற்றுமதி நாடுகளே தீர்வு காண வேண்டும் , விலை உயர்வால் உலக பொருளாதாரம் சரிந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் சவுதி அமைச்சர் கலீத் ஏ அல்-ஃபலீ அதற்கான முக்கிய காரணம் மோடி என தெரிவித்துள்ளார்.
