படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.
முப்டி என்ற கன்னடத் திரைப்படத்தை, அதே இயக்குநர் நார்தனை வைத்து தமிழில் மறுஆக்கம் செய்ய ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முடிவு செய்தார். இப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாகக் கூறப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் ஞானவேல் ராஜா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் சிம்பு ஒப்புக் கொண்ட படி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பு பின்னர் வெளிநாடு சென்றதால் தொடர்ந்து படபிடிப்பினை நடத்த இயலாமல் போனதாகவும் இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல்ரஜா சார்பில் தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி சேகரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.
தற்போது சிம்புவின் கால் ஷீட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிம்பு ஏற்கெனவே மாநாடு திரைப்படத்திற்கு முறையாக கால்சீட் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அந்தப் படத்தைக் கைவிடுவதாக அறிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் எழுந்திருப்பது சிம்புவுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.
