தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் நெடுங்கல்லில் 10 செ.மீட்டரும், மயிலாடி, கிருஷ்ணகிரியில் தலா 8 செ.மீட்டரும், குமாரபாளையம், திருத்துறைப்பூண்டியில் தலா 6 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு,நாமக்கல், தருமபுரி,கிருஷ்ணகிரி, வேலூர், திருநெல்வேலி,விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், நகரில் அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 80.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
