முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தொடங்கி 14 நாட்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்தார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 10ஆம் தேதி சென்னை திரும்பினார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார். மேலும் வெள்ளை அறிக்கை வெளியிடவும் வலியுறுத்தி இருந்தார். அதன்படி முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், நியூயார்க் நகரத்தில் சுற்றுப்பயணம் செய்ததன் மூலம், SD link LLC நிறுவனத்தில் இருந்து ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 15,000 வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதே போல், லிங்கே டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர எமர்சன், ஜீன் மார்டின், அக்வில் சிஸ்டம், ச்கிட்டஸ் ஃபார்மா சர்வீஸ், நொவிட்டியும், ஜோகோ ஹெல்த், ஆஸ்பையர் கன்சல்டிங், ஸில்லியான் டெக்னாலஜி, , பிஸோஃபோர்ஸ், நூர்ரே கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் 730 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் , 2 ஆயிரத்து 660 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ பயணத்தில், வேரபல் மெம்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,500 கோடி ரூபாய்க்கு கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம்,1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், இந்தே ஹோட்டல்ஸ் மூலம் 1,300 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, கேப்பிசாஃப்ட், இசட் எல் டெக்னாலஜீஸ், ரைப்.ஐஓ, கால்டன் பையோ டெக், லின்கன் எலெக்ட்ரிக், கிலெளட் லேர்ன், சியர்ரா ஹெல்த் அலெர்ட்ஸ், ஏ சி எஸ் கிளோபல் டெக் சொல்யூஷன்ஸ், டாட் சால்வ்ட் சிஸ்டம்ஸ், லேடண்ட். ஐ, அச்சிரியம், நேட்சர் மில்ஸ், சாய் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து 505 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 3 ஆயிரத்து 760 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
துபாய் நகரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம், டிபி வேல்ட்டு இன்டிகிரேடட் பிசினஸ் பார்க் பி., லிட் நிறுவனத்தில் இருந்து 1000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம், 1100 வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், ஜெயன்டி இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூலம் 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், ப்ரைம் ஹெல்த்கேர் சென்டர் நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ரே குளோபல் லாஜிஸ்டிக், கேஎம்சி குரூப் என துபாயில் 6 நிறுவனங்களில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் அரசு கூறியுள்ளது. மொத்தமாக 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
