தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84 சதவீதமும், நாங்குநேரியில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களுக்கு சீல்வைக்கப்பட்டு, விழுப்புரம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதியில் உள்ள களக்காட்டில் ஒப்புகைச் சீட்டு எந்திரம் 3 முறை பழுதானதால் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர். மற்றொரு கிராமத்தில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மின்னணு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 32 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைமறுநாள் காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
