திமுக சார்பில் நான்காவதாக வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த சந்திரசேகரன், முஹம்மத் ஜான், பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் சண்முகமும், வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 6 பேரும் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றனர். 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக இருந்ததால், போட்டியின்றி 6 பேரும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதாக, சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்தார்.
வெற்றிபெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட சந்திரசேகரன், முஹம்மத் ஜான், அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதேபோல, வைகோ, சண்முகம், வில்சன் ஆகிய மூவரும் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றனர்.
ஏற்கெனவே 3 முறை, 1978ஆம் ஆண்டு தொடங்கி 1996ஆம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ள வைகோ, தற்போது 4ஆவது முறையாக, நாடாளுமன்ற மேலவைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், 23 ஆண்டுகள் கழித்து வைகோ மாநிலங்களவையில் காலடி எடுத்து வைக்கிறார். தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், மாநிலத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் குரல்கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
