500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயார் என்று ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட மும்மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ஏவுகணையாகும். அந்த வகையில், பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் தூரம் 500 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயாராக இருப்பதாக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன சிஇஓ சுதிர்குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருப்பதால், பிரம்மோஸ் ஏவுகணையின் ரேஞ்சை அதிகரித்துக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுஹோய்-30 போர் விமானங்களில் பொருத்தி பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், போர் விமானங்களில் நீண்ட தூர ஏவுகணைகளை பொருத்தி பயன்படுத்தும் வல்லமை பெற்ற ஒரே நாடு உலகிலேயே இந்தியாதான் என தெரிவித்துள்ளார்.
போர் விமானத்தில் பொருத்தி பயன்படுத்த முடியும் என்பதால் நிலத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் பிரம்மோஸ் மூலம் தாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரம்மோஸ் மூலம் கடலில் 300 அல்லது 400 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள கப்பலை கூட தாக்க முடியும்.
