மணமகன், மணமகள் தொடர்பாக இணையதளங்களில் உள்ள தகவல்கள் சரிதானா? என்பதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில், 10 தனியார் இணையதள திருமண தகவல் மையங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி பெற்றோர் அறக்கட்டளை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இணையதள திருமண தகவல் மையங்களில் பல்வேறு பெயர்களை பதிவு செய்து கொண்டு, கணவரை இழந்த பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை வாங்கி ஒருவர் ஏமாற்றிய சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே திருமண தகவல் மைய இணைய தளங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட 10 திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது.
செவ்வாய் கிழமை அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் சேர்க்கப்பட்ட 10 தனியார் திருமண இணைய தள நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
