இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடி மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளில் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ராணுவம் உள்ளிட்ட துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 1704 பேர் 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம், ஜெனரேட்டர் வசதிகள், வேட்டி, சேலை, தலையணை, போர்வை, வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு, இடிபாடுகளை சீர் செய்ய 29 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். நோய்களை தடுக்க 23 நிலையான மற்றும் 13 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காட்டுக்குப்பையில் கனமழையில் சிக்கியிருந்த 36 மின் பணியாளர்கள், மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அவலாஞ்சியில் சிக்கியுள்ள 40 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாகக் கூறினார்.
வெள்ளம், இடிபாடுகளில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னன், விமலா, சுசீலா,பாவனா, அமுதா ஆகிய 5 பேர் உயிரிழந்ததாகக் கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
